அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம்
சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றுவது தொடர்பான காணொலிக்காட்சி வாயிலாக அனைத்து ஊராட்சிமன்ற தலைவர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூறியதாவது:- 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 15-ந் தேதி தேசிய கொடி ஏற்றி கொண்டாடப்படவுள்ளது. அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுவதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொடியேற்றுவதற்காக அனைத்து வீடுகளுக்கும் கொடிகள் சென்று சேரும் வகையில் தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அனைத்து ஊராட்சிகளிலும் சம்பந்தப்பட்ட ஊராட்சிமன்ற தலைவர்கள் மூலமாக கொடியேற்றப்படுவதை, சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். அன்றைய தினம் நடைபெறவுள்ள கிராமசபை கூட்டங்களில் அதிகளவிலான பொதுமக்கள் பங்கேற்கவும், கிராமங்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குனர் ரேவதி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) (பொறுப்பு) பழனிச்சாமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.