வாடிக்கையாளரின் கணக்கை முடக்கி வைத்த வங்கி ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு
வாடிக்கையாளரின் கணக்கை முடக்கி வைத்த வங்கி ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
வங்கி கணக்கு முடக்கம்
சென்னை, எல்லிஸ் சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ஜார்ஜ் (வயது 52). இவர் அண்ணா சாலையில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் கணக்கு வைத்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந் தேதி தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுக்க வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால் அவரது கணக்கு முடக்கப்பட்டு விட்டது என்பதால் பணத்தை எடுக்க முடியாது என்று வங்கியின் மேலாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிருப்தி அடைந்த ஜார்ஜ் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். பின்னர் இந்த வழக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் மாற்றப்பட்டது.
சேவை குறைபாடு
இந்த வழக்கை விசாரித்த அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு வாடிக்கையாளருக்கு அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்ட காரணத்தை தெரிவித்து விளக்கத்தை பெறாமலும், வங்கியில் இருந்து பணம் எடுக்க அவரை அனுமதிக்க மறுத்தது வங்கியின் சேவை குறைபாடு என்று தீர்ப்பளித்துள்ளது.
மேலும், சையத் ரஹ்மத்துல்லா என்பவர் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டு போலீசார் அவரை கைது செய்துள்ளதால் புகார்தாரரின் வங்கி கணக்கு 29-3-2015-ம் ஆண்டு முதல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50 ஆயிரம் இழப்பீடு
சையத் ரஹ்மத்துல்லா கைது செய்யப்பட்டதற்கும், ஜார்ஜ் வங்கி கணக்கை முடக்கி வைத்தது ஏன் என்பதற்கு வங்கி சரியான விளக்கம் அளிக்கவில்லை. வாடிக்கையாளருக்கு அறிவிப்பு அனுப்பி அவரது விளக்கத்தை கேட்காமல் தன்னிச்சையாக வாடிக்கையாளரை பணம் எடுக்க அனுமதிக்காமல் இருந்தது தவறு என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புகார்தாரரை அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க வங்கி அனுமதிக்க வேண்டும் என்றும் வங்கியின் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை 4 வாரத்திற்குள் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.