மதுரை எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடப்பதால் அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு
மதுரை எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடப்பதால் அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ரமேஷ் என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, 36 மாதங்களில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், தற்போது வரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. கோர்ட்டு உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, மத்திய அரசின் முதன்மை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த மாதம் 1-ந் தேதி நீதிபதிகள் ரமேஷ் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்டு, கட்டுமான பணிகள் தொடங்கும் நிலையில் உள்ளன என மத்திய அரசு வக்கீல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், அந்த மனு நேற்று நீதிபதிகள் சுப்பிரமணியன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டுமான பணிக்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்கும் நிலையில் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் மீண்டும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில் எய்ம்ஸ் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருப்பதால், கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை குறித்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க தேவையில்லை என்று தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.