எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும்;அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு


எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும்;அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு
x

எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

ஈரோடு

எதிர்த்து போட்டியிடுபவர்களை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.

இலவச மின் இணைப்பு

ஈரோடு வைராபாளையம் பகுதியில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு மாநகராட்சி பகுதியில் வாகனங்களில் செல்வதை விட நடந்து சென்றால் விரைந்து சென்றுவிடலாம் என்ற நிலை கடந்த ஆட்சியில் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் வெறும் 2 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கி உள்ளனர். 4 லட்சத்து 59 ஆயிரம் விவசாயிகள் இலவச மின் இணைப்பு வேண்டி காத்திருந்தனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் கடந்த 1 ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கி விவசாயிகளின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளார். ஈரோடு மாநகராட்சி பகுதியில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அனைவருக்கும் ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.

100 சதவீதம் வளர்ச்சி

பெண்கள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இதேபோல் மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி உள்பட 100-க்கும் மேற்பட்ட திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். பெரியாரின் வாரிசாக விளங்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு கிழக்கு தொகுதியில் மகத்தான வெற்றி பெற நீங்கள் அனைவரும் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி 100 சதவீதம் வளர்ச்சி அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதற்கு முன்பு ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

தற்போது அவருடைய தந்தை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, எதிர்த்து போட்டியிடும் அனைவரும் டெபாசிட் இழக்க நீங்கள் அனைவரும் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

அம்பேத்கர் சிலை

அதைத்தொடர்ந்து ஆதித்தமிழர் பேரவை தலைவர் அதியமான் பேசும்போது, 'நமக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்த கட்சிக்கு தான் நாம் இத்தனை ஆண்டுகள் வாக்களித்து வந்துள்ளோம். முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற உடன் மாவீரன் பொல்லானுக்கு மணி மண்டபம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ததோடு மட்டுமல்லாமல் ஈரோட்டில் அம்பேத்கருக்கு சிலை வைத்து அவரே திறந்து வைத்தார். 3 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக இன்று ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 6 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அரசு பள்ளிக்கூடங்களில் பணியாற்றி வருகின்றனர். நீதிபதிகள், டாக்டர்கள் அரசு பணிகளில் உள்ளனர். எனவே தி.மு.க. கூட்டணிக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்' என்றார்.


Next Story