பொங்கலையொட்டி தொடர் விடுமுறை:குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்


பொங்கலையொட்டி தொடர் விடுமுறை:குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொங்கலையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றலா பயணிகள் குவிந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொங்கலையொட்டி தொடர் விடுமுறை விடப்பட்டதால் குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றலா பயணிகள் குவிந்தனர்.

தொடர் விடுமுறை

பொங்கல் பண்டிகையொட்டி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. டாப்சிலிப்பில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டன. சுற்றுலா பயணிகள் கோழிகமுத்தி முகாமிற்கு சென்று யானைகளுக்கு உணவு வழங்குவதை பார்த்தனர்.

இதன் காரணமாக சேத்துமடை சோதனை சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோன்று குரங்கு நீர்வீழ்ச்சிக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். வடகிழக்கு பருவமழை பெய்யாதால் குரங்கு நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர்வரத்து குறைந்தது. இதனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டுகின்றது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை. குறைவாக விழுந்த தண்ணீரிலும் ஆனந்த குளியல் போட்டனர்.

னத்துறையினர் கண்காணிப்பு

சுற்றுலா பயணிகள் வனப்பகுதிக்குள் அத்துமீறி செல்வதை தடுக்க வனச்சரகர் புகழேந்தி தலைமையில் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ஆழியாறு சோதனை சாவடியில் வாகனங்களை வனத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது வாகனங்களில் இருந்த பிளாஸ்டிக் கவர்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் வனத்துறையினர் வால்பாறை ரோட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நின்ற சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் நவமலை ஆற்றுக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களால் ஆழியாறு வனத்துறை சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருந்தன. இதன் காரணமாக அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.



Next Story