பல்நோக்கு சேவை மையம் திட்டத்தை கைவிடக்கோரி தொடர் விடுப்பு போராட்டம்- தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் அறிவிப்பு
பல்நோக்கு சேவை மையம் திட்டத்தை கைவிடக்கோரி வருகிற 3-ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துவது என்று தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பல்நோக்கு சேவை மையம் திட்டத்தை கைவிடக்கோரி வருகிற 3-ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துவது என்று தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.
பணியாளர் சங்கம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் யோக சரவணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன், துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், பரமானந்தம், இணை செயலாளர் ராமசாமி, காளீஸ்வரி ஆகியோர் சிவகங்கை மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜீனுவிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு முழுவதும் 4,350 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 150 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும் உள்ளன. இதில் சுமார் 2000 கூட்டுறவு கடன் சங்கங்கள் மட்டுமே லாபத்தில் செயல்படுகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட விவசாய பயிர் கடன் தள்ளுபடி 40 கிராமுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் குழு கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
போராட்டம்
இந்த தள்ளுபடி கூறிய தொகை அரசிடம் இருந்து முழுமையாக வழங்கப்படாமல் உள்ளது. இதனால் லாபத்தில் செயல்பட்டு வந்த பெரும்பாலான சங்கங்கள் நஷ்டத்தில் உள்ளன. தற்போது கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் மற்றும் விவசாய உபகரணங்களான டிராக்டர், நெற்கதிர் அறுக்கும் எந்திரம், கரும்பு வெட்டும் எந்திரம் உள்ளிட்ட பொருட்களை பல லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாடகைக்கு விட வேண்டும் என்று கூட்டுறவு துறை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அனைத்து சங்கங்களும் இந்த திட்டத்தில் ஏதாவது ஒரு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.
பல்நோக்கு சேவை மையம் என்ற பெயரில் சங்க வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்கு பதிலாக விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வகையில் மத்திய காலகடனாக குறைந்த வட்டியில் வழங்கலாம்.
இந்த திட்டத்தினை அனைத்து சங்கங்களும் அமல்படுத்த வேண்டும் என்பதை கைவிட கோரி விவசாய கருவிகளை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் ஒப்படைத்துவிட்டு வருகிற 3-ந் தேதி முதல் தொடர் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.