மதுரையில் தொடர் கைவரிசை:கொள்ளையடித்து வந்து வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன்-ரூ.9 லட்சம் மீட்பு-பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது


மதுரையில் தொடர் கைவரிசை:கொள்ளையடித்து வந்து வீட்டைச்சுற்றி  புதைத்த 180 பவுன்-ரூ.9 லட்சம் மீட்பு-பெண் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
x

மதுரையில் கொள்ளையடித்து தங்களது வீட்டைச்சுற்றி புதைத்த 180 பவுன் நகைகள், ரூ.9 லட்சம் மீட்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை


தொடர் கொள்ளை

மதுரை சிலைமான், கருப்பாயூரணி போலீஸ் நிலையங்களில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. வீடுகளுக்குள் புகுந்து நகை, பணம் கொள்ளை மற்றும் இரவு நேரங்களில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருப்பவர்களின் வீடுகளுக்குள் சென்று நகை திருடுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இந்த குற்றங்களில் தொடர்புைடயவர்களை பிடிக்க ஊமச்சிகுளம் (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன், சிலைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், குமரகுரு உள்ளிட்டோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

180 பவுன் நகை, ரூ.9 லட்சம்

தனிப்படை போலீசார் இந்த வழக்கில் தீவிரமாக துப்புதுலக்கி வந்தனர். இந்தநிலையில் சிலைமான் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்தின்பேரில் 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மேற்கண்ட கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது.

மேலும் கொள்ளையடித்த பணம், நகையை அவர்கள் வீட்டை சுற்றி புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் தோண்டி எடுத்து மீட்டனர். அதாவது, பிளாஸ்டிக் பைகளில் சுற்றி புதைத்து வைத்த 180 பவுன் நகை, ரூ.9 லட்சத்தை போலீசார் கைப்பற்றினர்.

ேமலும் கைதான 4 பேர் குறித்து நடந்த விசாரணையில், மதுரை சக்கிமங்கலம், இளமனூர் புதூரைச் சேர்ந்த சகோதரர்கள் சின்னச்சாமி(வயது 25), சோனைச்சாமி(23), இவர்களது பெரியம்மா ஆசைபொண்ணு (65), இவரது மகன் பெரிய கருப்பசாமி (27) ஆகியோர் என தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த 3 வருடங்களில் பதிவான 30 வழக்குகளில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே கொள்ளையடித்த நகை-பணத்தை வைத்து புதிதாக இடம், வாகனங்கள் வாங்கி இருக்கிறார்கள். அவற்றை மீட்கும் நடவடிக்கையும் தொடங்கி இருக்கிறது.

பாராட்டு

இதுகுறித்து மதுரை கருப்பாயூரணி போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் கூறியதாவது:-

பூட்டிய வீடுகளுக்கு புகுந்து பீரோவில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து இருக்கிறார்கள். அவ்வாறு பணம் இல்லாவிட்டால் தூங்கி கொண்டிருப்பவர்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை அவர்களுக்கே தெரியாமல் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். மீட்கப்பட்ட நகை, பணம் உரியவர்களிடம் வழங்கப்படும். குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு பாராட்டுகள்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், நாளை (அதாவது இன்று) காலை 11 மணிக்கு செக்கானூரணி போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். எனவே, அவரை அழைத்து விசாரிக்க இருக்கிறோம். அவர் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் வலைத்தளங்களில் பதிவிட்டார் என்பது குறித்து கேட்கப்படும். ஒரு வேளை அவர் அதற்கான காரணங்களை தெரிவிக்காதபட்சத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story