தொடர் விடுமுறை எதிரொலி; வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு ஒரு வாரத்தில் 1.25 லட்சம் பார்வையாளர்கள் வருகை
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இன்று ஒரே நாளில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு,
தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறைகள் விடப்பட்டுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறைகளும் விடப்பட்டுள்ளதால் சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிலும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினரோடு வருகை தந்தனர். கடந்த ஒரு வாரத்தில் வண்டலூர் பூங்காவில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று வார விடுமுறை மற்றும் புத்தாண்டு விடுமுறை காரணமாக வண்டலூரில் காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று ஒரே நாளில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளனர். இன்று மாலை வரை தொடர்ந்து கூட்டம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.