பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு தொடர் ஓட்டம்


பிளாஸ்டிக் இல்லா விழிப்புணர்வு தொடர் ஓட்டம்
x

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர் ஓட்டம்

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீண்டும் மஞ்சப்பை மற்றும் பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி விழிப்புணர்வு தொடர் ஓட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த தொடர் ஓட்டத்தை கலெக்டர் சாந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் செந்தில் நகர், இலக்கியம்பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் நகர் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கை சென்று அடைந்தது. இதில் சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் இல்லா தர்மபுரி குறித்த விழிப்புணர்வு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பொதுமக்களுக்கு அவர்கள் துண்டு பிரசுரங்களையும் வினியோகம் செய்தனர். இந்த தொடர் ஓட்டத்தில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக கலெக்டர் தலைமையில் அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் தடை செய்யப்பட்ட ஒரு முறையே பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்துவது குறித்த உறுதிமொழி எடுத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மஞ்சப்பையுடன் கூடிய மரக்கன்றுகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நித்யலட்சுமி, உதவி பொறியாளர் லாவண்யா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கேசவகுமார், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பரமேஷ்வரன் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story