மதுரையில் தொடர் மழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு


மதுரையில் தொடர் மழை; சாலைகளில் வெள்ளப்பெருக்கு
x

மதுரையில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

மதுரை

மதுரையில் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்தது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தொடர் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

உசிலம்பட்டியில் 111 மி.மீ மழை

மதுரையில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மதுரை நகர் மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பேய் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் பெய்த தொடர் மழையால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்து போனது. ஆங்காங்கே மரங்களும் சாலையில் சரிந்தன. பல இடங்களில் நேற்று மாலை வரை மழைநீர் வடியவில்லை.

நேற்று முன்தினம் உசிலம்பட்டியில் 111 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதனைத்தொடர்ந்து குப்பணம்பட்டியில் 85, தல்லாகுளத்தில் 71.40, மதுரை வடக்கு 65.20, சோழவந்தானில் 60.30 மில்லி மீட்டர் அளவுகளில் மழை பதிவானது.

பசுங்கன்று இறந்தது

பேரையூரில் நேற்று முன்தினம் இடி மின்னலுடன் கூடிய 34 மி.மீ. மழை பதிவானது. இந்த மழையால் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பி.முத்துலிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. பேரையூர் அருகே உள்ள பழையூரை சேர்ந்த திருமலையம்மாள் என்பவருடைய வீடு சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் ஆத்தங்கரைபட்டியை சேர்ந்த போதராஜ் என்பவருக்கு சொந்தமான பசுங்கன்று ஒன்று இடி மின்னல் தாக்கியதில் இறந்துவிட்டது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.

தொடர் மழை

இந்த நிலையில் நேற்று மாலையிலும் நகரில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்தது. தொடர்ந்து இரவு விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. உசிலம்பட்டி பகுதியிலும் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.

திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி மற்றும் திருப்பரங்குன்றத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதிகளில் நேற்று மாலையில் இடி மின்னலுடன் மழை கொட்டியது. அதில் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. கண்மாய் பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. ரோட்டில் தண்ணீர் ஓடியதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது.

சாத்தியார் அணை

பாலமேடு மேற்கு பகுதியில் வகுத்து மலை, சிறுமலை, மஞ்ச மலை, செம்பூத்து மலை தொடர்ச்சிகளில் அமைய பெற்றுள்ளது சாத்தியார் அணை. இந்த அணைக்கு தென்மேற்கு பருவ மழையினால் நீர்வரத்து வர தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையினால் 26 மி.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. நேற்றும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தது. அணையின் மழை நீர்மேலும் அணைக்கு வினாடிக்கு 13 கன அடிதண்ணீர் நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைக்கு வரும் நீர்வரத்து கால்வாயை பார்வையிட்டும், மதகுகளையும்.சரிபார்க்கும் பணியிலும் அணையின் பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் பணியாளர்கள், நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ள சூரக்குளம் கண்மாய் ஏற்கனவே ஒரளவுக்கு தண்ணீர் இருந்து வந்தது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.அதன் தண்ணீர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்கிறது. தொடர் மழை காரணமாக மதுரையை சுற்றி உள்ள கண்மாய், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். தொடர் மழை காரணமாக மதுரை நகரம் குளிர்ந்த சிதோஷ்ண நிலையுடன் காணப்பட்டது. வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story