கூலி உயர்வு வழங்கக்கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
பொள்ளாச்சி
கூலி உயர்வு வழங்கக்கோரி பொள்ளாச்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள்.
வேலை நிறுத்தப் போராட்டம்
பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்கள் மூலம் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் நிரந்தர பணியாளர்கள் 70 பேரும், ஒப்பந்த பணியாளர்கள் 260 பேரும் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணை அடிப்படையில் கோவை மாவட்ட கலெக்டரின் குறைந்தபட்ச ஊதிய நிர்ணய சட்டப்படி தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்க கோரி பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கினார்கள். இதற்கு முருகானந்தம் என்பவர் தலைமை தாங்கினார்.
கோரிக்கை
இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரம் மற்றும் பொதுப் பணியாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் அரசாணை அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் வினியோக பணியாளர்கள் உள்பட அனைத்து தினக்கூலி ஒப்பந்த பணியாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். அதன்படி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.606-ம், பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.529-ம் வழங்க வேண்டும். ஆனால் தற்போது ரூ.425 தான் வழங்கப்படுகிறது. இந்த கோரிக்கை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் பொள்ளாச்சி நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளாகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். முன்னதாக, தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவினை பொள்ளாச்சி காந்தி சிலையின்கீழ் வைத்து தூய்மை பணியாளர்கள் வணங்கினர். ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் போராட்டம் காரணமாக பொள்ளாச்சி நகராட்சியில் ஏராளமான பகுதிகளில் குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளது.