பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை
பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்தார்.
கண்காணிக்க வேண்டும்
வடகிழக்கு பருவழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கோவை மாநக ராட்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தலைமை தாங்கி பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் பிரதான கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழ் பகுதி, கிக்கானி பாலம் ஆகியவற்றில் கூடுதலாக 2 அதிவேக மின்மோட்டார்கள் பயன்படுத்தி மழைநீரை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் இருந்து வெளியேறும் உபரி நீாின் அளவை கண்காணிக்கவும், தேவைப்படும் இடங்களில் மழைநீர் வடிகால்களை தூர்வாரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கட்டுப்பாட்டு அறை
கோவை மாநகராட்சி 5 மண்டலங்களிலும் தலா 100 மணல் மூட்டை வீதம் 500 மணல் மூட்டைகளை தயார்நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மழைநீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால்கள், சாலைகள், தெருக்களில் வீடுகளின் முன்பு உள்ள சாய்தள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.
பருவமழை தொடர்பான தகவல்களை தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. பருவமழை தொடர்பான சந்தேகங்கள், தகவல்களை தெரிவிக்க 8190000200 அல்லது 04222302323, 04222300132 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, மாநகர பொறியாளர் அரசு, மண்டல உதவி ஆணையாளர்கள் முத்துராம லிங்கம், சேகர், மோகனசுந்தரி, அண்ணாதுரை, மகேஷ்கனகராஜ், நகர்நல அலுவலர் பிரதீப் வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.