சர்ச்சை பேச்சு: திடீரென ராமேசுவரம் கோவிலுக்கு வந்த நடிகர் சூரி...!
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நடிகர் சூரி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
ராமேசுவரம்,
விருமன் திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா மதுரையில் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் சூரி, நடிகர் சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன.
இதனை தொடர்ந்து, தான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது என்று சென்னையில் கடந்த 8-ம் தேதி நடந்த படவிழாவில் நடிகர் சூரி விளக்கம் அளித்தார்.
அதில், நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது.
நான் நடத்தும் ஓட்டலுக்கு அம்மன் என தான் பெயர் வைத்துள்ளேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்து கொண்டனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் படிக்காதவன் அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று தான் அதை சொன்னேன்.
நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. அத்துடன் நான் படிக்காதவன் எனபதால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் என்பதால் தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், நடிகர் சூரி தனது குடும்பத்துடன் ராமேசுவரம் சென்று ராமநாதசாமி கோவிலில் சாமிதரிசனம் செய்தார். ரசிகர்கள் சூரியை பார்த்த மகிழ்ச்சியில் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.