அனுமதியின்றி விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றம்-குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு
கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கோவை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் அனுமதியின்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு உள்ளது என்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான விவசாயிகள், விவசாய சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-
கிராமங்களில் உற்பத்தியாகும் இயற்கையுடன் கூடிய முருங்கைக்கீரை, புதினா, பிரண்டை, வல்லாரை, முடக்கத்தான் போன்ற கீரைகளில் இருந்து கலப்படம் இல்லாமல் விவசாயிகள் இயற்கை முறையில் சூப் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் தொண்டாமுத்தூர் பகுதிகளில் தமிழக அரசு மூலம் புத்துயிர் பெற்று வரும் உழவர் சந்தைகளில் இந்த வகை சூப்களை விற்பனை செய்யவும், குறிப்பாக ஆர்.எஸ்.புரம் மற்றும் பிற உழவர் சந்தைகளில் விவசாயிகள் தயாரிக்கும் மூலிகை தன்மை கொண்ட கீரை சூப்புகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்.
வீட்டுமனைகள்
கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தாலுகாக்களில் இயங்கி வந்த கல்குவாரிகள் செயல்படாமல் கிடைக்கிறது. அரசு மற்றும் தனியார் குவாரிகளை கண்டறிந்து மழைக்காலங்களில் மழை நீரை அதில் சேகரிக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். எனவே சூலூர் மதுக்கரை, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் கல் குவாரிகளில் மழைநீர் சேகரிக்கும் பணியை கனிமவளத்துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாய நிலங்கள் அனுமதி இன்றி வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விவசாயிகளுக்கு நஷ்டம் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவர் வேணுகோபால் பேசும்போது, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம் சோமையம்பாளையம் பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் விவசாய நிலங்களில் சுற்றித் திரிகிறது. இவை விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சாப்பிட்டு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது.இது தொடர்பாக சோமையம்பாளையம் பஞ்சாயத்தை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.கலெக்டர் இதனை தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.காரமடை வட்டாரம் தோலம்பாளையம் பகுதியில் 50 வருடங்களுக்கு மேலாக 150 விவசாயிகள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை கோரிக்கையான வீட்டுமனை பட்டா கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பயிர் கடன், சொட்டுநீர் பாசனம், காப்பீட்டு திட்டம், மானியம் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் தொடர்பாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.