குற்றாலம் சாரல் திருவிழாவில் சமையல் போட்டி

குற்றாலம் சாரல் திருவிழாவில் சமையல் போட்டி நடந்தது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலை அரங்கத்தில் சாரல் திருவிழா நடந்து வருகிறது. நேற்று உணவு கலை நிபுணர் பழனி முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சமையல் நிகழ்ச்சியை நடத்தினார்.
இதில் மறந்து போன உணவுகளை மலர வைப்போம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மறந்து போன உணவுகளுக்கான சமையல் போட்டியை நடத்தினார். இப்போட்டியில் 14 குடும்ப தலைவிகள் கலந்து கொண்டனர். அவர்களது வீட்டிலேயே பாரம்பரிய உணவுகளான வேர்க்கடலை லட்டு, பொரி அரிசி குழம்பு, வெந்தயக்களி, ஆடி கும்மாயம், நெல் சோறு, தினை சாக்கோ பால்ஸ், பலாப்பழ மைசூர்பாகு, கருப்பு கவுனி சாம்பார் சாதம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய உணவுகளை சமைத்துக் கொண்டு வந்தனர்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓட்டல் ட்ரிசில் சார்பில் முதல் பரிசு மீனாம்பிகை என்பவருக்கும், 2-வது பரிசு நாகேஸ்வரிக்கும், 3-வது பரிசு நிர்மலாவுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவியாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






