குன்னூர் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் தர்ணா போராட்டம்


குன்னூர் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Oct 2023 7:30 PM GMT (Updated: 7 Oct 2023 7:30 PM GMT)

முறையாக சம்பளம் வழங்க கோரி குன்னூர் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி

முறையாக சம்பளம் வழங்க கோரி குன்னூர் அரசு ஆஸ்பத்திரி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தற்காலிக பணியாளர்கள்

குன்னூரில் அரசு லாலி ஆஸ்பத்திரி உள்ளது. இது ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பழமையான மருத்துவமனையாகும். இங்கு குறைந்த ஊழியர்கள் மட்டுமே பணிபுரிந்து வந்தனர். இதனால் தூய்மை பணி உள்பட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள ஊழியர்கள் பற்றாக்குறை இருந்து வந்தது. மேலும் அரசு ஆஸ்பத்திரி தூய்மையாக பராமரிக்கப்படாமல் காணப்பட்டது.

இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர். இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சமீபத்தில் அரசு லாலி ஆஸ்பத்திரி நவீனப்படுத்தப்பட்டது. சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இதனால் 30 தற்காலிக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.

தர்ணா போராட்டம்

இந்தநிலையில் நேற்று முறையாக சம்பளம் வழங்க கோரி தற்காலிக பணியாளர்கள் ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, நாங்கள் பணியில் சேர்ந்த போது கொடுக்கப்பட்ட பணி தவிர்த்து, பிற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், குன்னூர் அரசு ஆஸ்பத்திரியில் ரூ.11 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அதனையும் முறையாக வழங்குவது இல்லை. எனவே, மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்க வேண்டும். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story