கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
செய்யாறில் கூட்டுறவு சர்க்கரைஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
செய்யாறில் கூட்டுறவு சர்க்கரைஆலை தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரத போராட்டம்
செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றும் நிரந்தர தொழிலாளர்கள் அரசு அலுவலர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பருவகால தொழிலாளர்களை நிரத்தரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலை நுழைவுவாயில் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன. அதில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு இரண்டு விதமான சம்பள விகிதங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இரட்டை ஊதியம்
சர்க்கரை ஆலைகளில் இருந்துவரும் இரட்டை ஊதிய முறையினை களைந்து அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே விதமான ஊதிய முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தொழிலாளர்கள் தொடுத்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு 2005-ல் தொழிலாளர்களிடையே நிலவி வரும் இரட்டை ஊதியம் முறையை களைந்து ஒரே ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.
கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக சர்க்கரை ஆலை நிர்வாகமும், சர்க்கரைத்துறை ஆணையகமும் மேல் முறையீடு செய்துள்ளது.
அந்த மேல் முறையீட்டு மனுவை திரும்ப பெற்றுக்கொண்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஒரேவிதமான ஊதிய முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆலையில் பணியாற்றிடும் பருவகால தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
வேலைநிறுத்த போராட்டம்
எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வருகிற டிசம்பர் மாதம் ஆலை அரவை காலத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
உண்ணாவிரத போராட்டத்தில் அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஆண், பெண் தொழிலாளர்கள் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.