திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் அறிவுரை


திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போதுபோக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் அறிவுரை
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:45 PM GMT)

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தின்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலெக்டர் மோகன் அறிவுரை கூறினார்.

விழுப்புரம்

ஒருங்கிணைப்பு கூட்டம்

விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்புக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் வருகிற 1.2.2023 அன்று கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்பதால் காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். வாகன அனுமதிச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே வாகனங்கள் நிறுத்த அனுமதி வழங்க வேண்டும். கோவில் வளாகம் மற்றும் சாலைகளில் ஆங்காங்கே தடுப்புக்கட்டை அமைத்து கூட்டநெரிசல், போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவண்ணம் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மருத்துவக்குழு

தீயணைப்புத்துறை சார்பில் யாகசாலை மற்றும் திருக்குளம் அருகில் தீயணைப்பு வாகனம் மற்றும் கூடுதல் தீயணைப்பு பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும். போக்குவரத்துத்துறை சார்பில் முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும். சுகாதாரத்துறை சார்பில் கோவில் வளாகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒன்றும் மற்றும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படக்கூடிய மருத்துவக்குழு ஏற்படுத்தி சிறப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

மேலும் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் கோவிலை சுற்றியும், மக்கள் கூடும் இடங்களிலும் குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். அதுபோல் தற்காலிக குளியலறை, கழிவறை அமைக்க வேண்டும். மின்வாரியம் சார்பில் தங்குதடையின்றி மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க வேண்டும். கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கோவில் கும்பாபிஷேக விழா சிறப்பாகவும், பாதுகாப்புடனும் நடைபெற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், கோவில் திருப்பணிக்குழு தலைவர் குபேரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story