மதுரையில் பெண் டாக்டருக்கு கொரோனா
மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதுரை அரசு ஆஸ்பத்திரி பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நேற்றைய நிலவரப்படி 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் 150-க்கும் குறைவாக இருந்த மொத்த கொரோனா பாதிப்பு தற்போது 250 -ஐ கடந்திருக்கிறது. நேற்று முன்தினமும் 273 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால், தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நோயாளிகள் உள்பட அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
மதுரையை பொறுத்தமட்டில் கொரோனாவால் தினமும் 2 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் நிலவரப்படி மதுரையில் கொரோனாவுக்கு 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுபோல், மதுரை பாலமேட்டைச் சேர்ந்த விசாரணைக் கைதி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பெண் டாக்டர்
இந்த நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வரும் பெண் டாக்டர் ஒருவர் கேரளத்தில் உள்ள சொந்த ஊருக்கு சென்று வந்துள்ளார். இதைத்தொடர்ந்து அவருக்கு சில நாட்களாக சளி, காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்துள்ளது. இதற்கு சிகிச்சைப் பெற்றும் அவர் குணமடையாததால் சந்தேகத்தின்பேரில் அந்த பெண் டாக்டர் கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், பெண் டாக்டருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு கொரோனா அறிகுறிகளுடன் தினசரி 10-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் லேசான பாதிப்பு என்றால் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிப்பு அதிகம் உள்ளது என்றால் அவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றனர்.