தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்


தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பு: 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம்
x

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் வேளையில் தமிழகத்தில் நாளை மறுதினம் (12-ந்தேதி) ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதியவர்கள் தவறி கீழே விழுவதால் ஏற்படும் பாதிப்புகளும், இதனை தவிப்பதற்கான வழிமுறைகளும் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை எம்.ஜி.எம். ஹேல்த்கேரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கொரோனா தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து கூடிக்கொண்டிருக்கிறது. சென்னையில் மட்டுமே நேற்று (நேற்று முன்தினம்) 95 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 22 இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோருக்கு தொற்று இருந்தது. அவர்களையும், அவர்கள் தொடர்புடையவர்களையும் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

மராட்டியம் போன்ற மாநிலங்களில் முககவசம் அணிய வேண்டியது இல்லை என்ற அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது முககவசம் அவசியம் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை முககவசம் அணியவேண்டியது இல்லை என்ற அறிவிப்பை நாம் வெளியிடவில்லை. ஏனென்றால் பேரிடர் முடிகிறவரை நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். பொது நிகழ்ச்சிகளில் கூட முககவசம் அணிய வேண்டியது என்பதை கட்டாயமாக்கிக் கொண்டிருக்கிறோம்.

தடுப்பூசி முகாம்

தடுப்பூசியை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 42 லட்சத்து 87 ஆயிரத்து 346 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போட வேண்டியுள்ளது. 2-வது தவனை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியவர்கள் 2 கோடி பேர் இருந்த நிலையில் தற்போது 1 கோடியே 20 லட்சமாக குறைந்துள்ளது. மொத்தமாக 1 கோடியே 64 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடவேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கையிருப்பில் 99 லட்சத்து 56 ஆயிரத்து 665 தடுப்பூசி உள்ளது. தினந்தோறும் 15 முதல் 20 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டால், அனைவருக்கும் தடுப்பூசி போட தாமதமாகும் என்பதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மெகா தடுப்பூசி முகாம் கடந்த மாதம் ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டு, 17.75 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வகையில் வருகின்ற 12-ந் தேதி (நாளை மறுதினம்) மீண்டும் ஒரு லட்சம் இடங்களில் தமிழ்நாடு முழுவதிலும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது.

உருமாறும் கொரோனா

பி.எ.4 மற்றும் பி.எ. 5 போன்ற உருமாற்ற வைரஸ் பாதிப்பு நமக்கு வரத்தொடங்கி இருக்கிறது. 150 மாதிரிகளில் 4 நபர்களுக்கு பி.எ.4- ம், 8 நபர்களுக்கு பி.எ.5- ம் என மொத்தம் 12 நபர்களுக்கு இருந்தது. மேலும் மாதிரிகள் எடுக்கப்பட்டு உள்ளது, அதன் விபரம் பின்னர் தெரியவரும். ஒமைக்ரானை பொறுத்தவரையில் 7 வகையிலான உருமாற்றங்கள் உள்ளது.

ஆனால் அது பெரிய வகையில் உயிர் பாதிப்பை ஏற்படுத்துவதாக இல்லை என்றாலும் அது வேகமாக பரவும் தன்மையுடையது. எனவே நாம் கூடுதல் கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகளை விதித்து, செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். முன்னெச்சரிக்கையாக தனிமனித இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக்கொள்வது போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.

பூஸ்டர் தடுப்பூசி

'பூஸ்டர்' தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கும் 60 வயதை கடந்தவர்களுக்கும் அரசு ஆஸ்பத்திரிகளில் போடப்படுகிறது, மேலும் மெகா தடுப்பூசி முகாம்களிலும் போடப்படும். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியின் மூலம் ரூ.388-க்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது, அதையும் அரசு ஆஸ்பத்திரிகளில் போட ஒன்றிய அரசை கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story