வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை


வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 24 Dec 2022 12:15 AM IST (Updated: 24 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

புதிய வகை தொற்று பரவுவதால் கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிறப்பு பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

பீளமேடு

புதிய வகை தொற்று பரவுவதால் கோவை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சிறப்பு பரிசோதனை மையம் திறக்கப்பட்டது.

புதிய வகை கொரோனா

நமது அண்டை நாடான சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக தொற்றால பாதிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து நமது நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

பரிசோதனை மையம் திறப்பு

கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து தினமும் 2 விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் இங்கும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் விமான நிலையம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை இணைந்து விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு பரிசோதனை மையம் திறக்கப்பட்டு உள்ளது.

பயணிகளின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க தானியங்கி கருவி அமைக்கப்பட்டு இருக்கிறது. அதுபோன்று வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையே அங்கு திறக்கப்பட்டு உள்ள பரிசோதனை மையத்தை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன், மாவட்ட துணை சுகாதார இயக்குனர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா பரிசோதனை

கோவைக்கு சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் 2 விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய வகை கொரோனா பரவி வருவதால் இன்று (நேற்று) முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் ஸ்கேனிங் மற்றும் கொரோனா பரிசோதனை முழுமையாக செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இந்த 2 நாடுகளில் இருந்து 400 பயணிகள் கோவை வந்தனர்.

பாதிப்பு இல்லை

அவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை. சோதனையின்போது பயணிகளுக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் கொடுத்து விடுவோம். அவர்கள் அந்த நபர்களை தீவிரமாக கண்காணித்து, தனிமைப்படுத்துவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story