தர்மபுரி மாவட்டத்தில் இன்று 2,214 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் 2,214 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் 2,214 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கொரோனா தடுப்பூசி முகாம்
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் 2,214 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விடுபட்டு போன களப்பணியாளர்கள், முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் இந்த முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் பொது மக்கள் கூடும் இடங்களில் அனைவரும் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்.
ரூ.500 அபராதம்
பொதுமக்கள் கூடும் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து வருவதை சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வருபவர்களுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த பரிசோதனை முடிவு கிடைக்கும் வரை தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.