தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!


தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!
x

கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் தொடர்ச்சியாக இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று வரையில் 13 லட்சத்து 72 ஆயிரத்து 219 பேர் முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர்.

இவர்களுக்காக இன்று ஒரு வார்டுக்கு 17 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்டுக்கும் 8 சுகாதார குழுக்கள் வீதம் 200 வார்டுக்கு 1600 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி போடாமல் உள்ளவர்கள் பெயர் விவரம் சுகாதாரப் பணியாளர்களிடம் உள்ளதால் அவர்கள் அந்தந்த வீடுகளுக்கு சென்று முகாம் அருகில் நடைபெறுவதை கூறி தடுப்பூசி போட அழைப்பு விடுக்க உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவோருக்கும் முக்கியத்துவம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


Next Story