கொரோனா பாதிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்


கொரோனா பாதிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 4 July 2022 2:31 PM GMT (Updated: 4 July 2022 2:51 PM GMT)

10-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், இடைக்கழிநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நேற்று 2,622 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 14,504 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் 5 சதவீதம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வீடுகளில் பெரும்பாலோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்கள். தொற்றின் வேகம் என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கேற்ப தொற்று அதிகம் பரவியிருக்கிற சென்னை, செங்கல்பட்டு , கோயம்புத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து விரைவுபடுத்த வேண்டும் என்கின்ற வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களில் 14,504 பேர் வீடுகளில் 95 சதவீதம் பேர் இருக்கிறார்கள். மத்திய அரசின் விதிமுறைகள் என்பது பாதிக்கப்பட்டவர்களில் 40 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான அவசியம் தற்போது இல்லை.

வருகிற 10ம் தேதி தமிழ்நாடு முழுவதிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட இருக்கிறது. 10-ம் தேதி நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் தடுப்பூசி செலுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார்.


Next Story