மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்


மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.-கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்
x

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் குப்பை வரிவிதிப்பு தொடர்பாக நடந்த விவாதத்தில் அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் குப்பை வரிவிதிப்பு தொடர்பாக நடந்த விவாதத்தில் அ.தி.மு.க.-இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மேயரை முற்றுகையிட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.

பட்ஜெட் மீதான விவாதம்

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று காலை மாநகராட்சி மாமன்ற அரங்கில் மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த பட்ஜெட் கூட்டத்தில் மேயர் அறிவித்தபடி, நேற்றைய கூட்டம் தொடங்கியதும் பட்ஜெட் மீதான விவாதம் நடந்தது.

கவுன்சிலர் செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு) :-

மாநகராட்சி மண்டலத்தில் வார்டுக்கான ஒதுக்கீடாக ரூ.1¼ லட்சமாக உள்ளது. அதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

மேயர் தினேஷ்குமார்:-

மண்டலத்துக்கு கடந்த ஆண்டு ரூ.9 கோடி வழங்கப்பட்டு இருந்த நிதி இந்த பட்ஜெட்டில் ரூ.13¼ கோடியாக அதிகப்படுத்தி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு வரியினங்கள் மூலமாக வருவாய் அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருவாய் அதிகரிக்கும்போது நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அளவில் திருப்பூர் மாநகராட்சி கடந்த ஆண்டு தமிழக அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்று பணிகளை மேற்கொண்டுள்ளது.

குப்பை வரி

எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி (அ.தி.மு.க.) :-

அம்மா உணவகத்துக்கு இந்த பட்ஜெட்டில் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. குப்பை வரியை முறைப்படுத்தவும், அதில் உள்ள இடர்பாடுகளை நீக்கவும் தொடர்ந்து வலியுறுத்தியும் பட்ஜெட்டில் அரசிடம் தெரிவிக்கப்படும் என்று மட்டுமே உள்ளது. குப்பை வரியை முறைப்படுத்தாமல் மற்ற வரிகளை செலுத்த முடியாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இதில் காலதாமதத்தை கையாளுவது வேதனையானது. அரசு பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த போதுமான அளவு நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.

சொத்துவரி அதிகமாக உள்ளதை குறைக்கக்கோரி பொள்ளாச்சியில் அ.தி.மு.க. போராட்டம் நடத்தியதால் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அங்கு சொத்துவரி குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல் திருப்பூர் மாநகராட்சியிலும் சொத்துவரியை குறைப்பதற்கு அனைத்து கவுன்சிலர்கள் ஒத்துழைப்புடன் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு தெரிவிக்க வேண்டும். வார்டு மேம்பாட்டுக்கு கவுன்சிலர்களுக்கு தனியாக சிறப்பு நிதி ஒதுக்கீடு அறிவிப்பு இல்லை. இதனால் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

பள்ளிக்கல்வித்துறை

அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்ததும், மேயர் தினேஷ்குமார் தனது பதில் உரையை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் என்றார். இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருக்கையில் அமர்ந்தனர்.

மேயர் தினேஷ்குமார்:-

பள்ளிகல்வித்துறை நிதி ஒதுக்கீடு பட்ஜெட்டில் குறைவாக உள்ளது என்பது தவறான தகவல். கடந்த ஆண்டு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு ரூ.3 கோடியே 65 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. நமக்கு நாமே திட்டத்தில் 49 வகுப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. 75 கூடுதல் கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

குப்பை வரி குறைப்பு தொடர்பாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான் குப்பை வரி உள்ளிட்ட வரியினங்கள் அமல்படுத்தப்பட்டது என்று பேசினார்.

உடனே கவுன்சிலர் அன்பகம் திருப்பதி எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியில் வரியினங்கள் அதிகப்படுத்தி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. அமல்படுத்தப்பட்டது என்று தவறான தகவல் தெரிவிக்க வேண்டாம் என்றார்.

முற்றுகையிட்டு வாக்குவாதம்

அப்போது இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் செல்வராஜ் எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியில் வரியினங்கள் பன்மடங்கு உயர்த்தப்பட்டது என்று பேசியதும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து, அ.தி.மு.க. ஆட்சியில் வரி உயர்த்தி வசூலிக்கப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் தான் வரியினங்கள் உயர்த்தி பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. மேயர் பதில் கூறும்போது, கவுன்சிலர் எழுந்து பதில் கூறக்கூடாது என்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் எழுந்து பதில் தெரிவித்தார்கள். ஒரு கட்டத்தில் இரு கட்சி கவுன்சிலர்களிடையே கடும் வாக்குவாதமாக மாறியது. மேயர் தலையிட்டு அனைவரையும் அமரக்கூறியும் வாக்குவாதம் நீடித்தது. பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இருக்கையில் இருந்து எழுந்து மேயர் இருக்கைக்கு முன் நின்று முற்றுகையிட்டபடி, மேயர் பதில் கூறும்போது, மற்ற கவுன்சிலர்கள் பதில் கூறக்கூடாது. குப்பை வரியை குறைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என்றனர். இருக்கையில் அமரும்படி மேயர் கேட்டுக்கொண்டார். ஆனால் தங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறி அ.தி.மு.க.வினர் அனைவரும் மாமன்ற கூட்ட அரங்கில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

கடும் ஆட்சேபனை

பின்னர் மேயர் தினேஷ்குமார் பேசும்போது,'மாமன்றத்தில் இருக்கையில் இருந்து எழுந்து வந்து மன்றத்தின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதற்கு மாமன்றம் கடும் ஆட்சேபனையை பதிவு செய்கிறது. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தயாராக உள்ளேன். ஆனால் திட்டமிட்டு வெளிநடப்பு செய்கிறார்கள்' என்றார்.

தொடர்ந்து மேயர் பேசும்போது, 'அம்மா உணவகத்துக்கு ரூ.2½ கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. குப்பை வரியை மறுபரிசீலனை செய்து தெளிவான திட்ட அறிக்கையுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்' என்றார்.

குப்பை வரி கணக்கீடு

ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர்:-

குப்பை வரி தொடர்பாக தனியார் நிறுவனம் மூலமாக வருகிற 17-ந் தேதி முதல் வார்டு வாரியாக கணக்கீடு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வழங்க உள்ளனர். முழு சர்வே முடிந்து புள்ளி விவரங்களுடன் திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் பரிசீலனைக்கு பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


இந்திய கம்யூனிஸ்டு வெளிநடப்பு

மாமன்ற கூட்டத்தில், 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளை செயல்படுத்துவதற்கு தேவையான வாகனங்கள் மற்றும் பணியாளர்களை வெளிச்சந்தை முறையில் பணியமர்த்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்ய நகராட்சி நிர்வாக இயக்குனர் செயல்முறை உத்தரவுக்கு நிர்வாக அனுமதி வேண்டி தீர்மானம் வைக்கப்பட்டது. மாநகரில் சேகரமாகும் குப்பை எடையின் அடிப்படையில் தனியாருக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது. ஆண்டுக்கு ரூ.96 கோடியே 25 லட்சத்தில் பணிகள் விட தெரிவிக்கப்பட்டது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்து,'குப்பை அள்ளுவதை தனியார் மயமாக்கக்கூடாது. நிரந்தர துப்புரவு பணியாளர்களை அந்தந்த வார்டுகளில் பணியமர்த்த வேண்டும். அவர்களை வேறு வார்டுக்கு மாற்றக்கூடாது. இந்த தீர்மானத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என்றார்.

மேயர் தினேஷ்குமார், இந்த தீர்மானம் அரசின் கொள்கை முடிவு என்றார். இதைத்தொடர்ந்து தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


காங்கிரஸ் வெளிநடப்பு

ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிப்பு செய்யப்பட்டதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 48-வது வார்டு கவுன்சிலர் விஜயலட்சுமி மன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி அரங்கில் இருந்து வெளியே சென்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெளிநடப்பு

ஸ்மார்சிட்டி திட்டத்தில் நொய்யல் ஆறு மேம்பாடு பணியில் முள்ளுக்காடு, ஆலாங்காடு, காயிதே மில்லத் நகர், சின்னான்நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒப்புதல் அளித்து மாமன்ற ஒப்புதலுக்கு தீர்மானம் வைக்கப்பட்டு இருந்தது. 45-வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) பேசும்போது, 'காயிதே மில்லத் நகர் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க ஏற்கனவே வார்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனால் வேறு பகுதிக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மாற்ற வேண்டும்' என்றார்.

மேயர் தினேஷ்குமார், 'சங்சிலிப்பள்ளம் ஓடை வழியாக வரும் நீரை சுத்திகரிப்பு செய்ய அந்த இடத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டியுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது' என்றார். ஆனாலும் கவுன்சிலர் பாத்திமா தஸ்ரின் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.



Related Tags :
Next Story