ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு
ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம் மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று அவர் ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளிக்கூடத்தில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக பள்ளிக்கூடத்துக்கு வந்த மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியத்துக்கு பள்ளிக்கூட தலைமை ஆசிரியை கே.சுமதி தலைமையில் ஆசிரியைகள் வரவேற்பு அளித்தனர்.
பள்ளிக்கூடத்துக்கு வந்த மேயர், வகுப்பறைகளை பார்வையிட்டார். பள்ளியின் சமையல் அறை, கழிப்பறை உள்ளிட்டவற்றையும் பார்வையிட்டார். பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியைகள் எண்ணிக்கை, பிற பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் குறித்தும் கேட்டார். அதற்கு பள்ளிக்கூட உதவியாளர், காவலர் மற்றும் தூய்மை பணியாளர் பணியிடங்கள் நியமிக்க கோரி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியைகள் கோரிக்கை வைத்தனர். வகுப்பறை பராமரிப்பு, கல்வி மற்றும் மாணவ-மாணவிகள் மீதான அக்கறை குறித்தும் கேட்டு அறிந்தார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பள்ளிக்கூட கோப்புகளையும் அவர் ஆய்வு செய்தார். மேயருடன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ரேவதி திருநாவுக்கரசு, பிரவீணா, நந்தகோபு ஆகியோர் வந்திருந்தனர்.