மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் வேலைநிறுத்த போராட்டம்
உயர்த்தப்பட்ட சம் பளத்தை முழுமையாக வழங்கக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
கோவை
உயர்த்தப்பட்ட சம் பளத்தை முழுமையாக வழங்கக்கோரி கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினார்கள்.
ஒப்பந்த டிரைவர்கள்
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை லாரிகளில் ஏற்றிச்சென்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த பணியில் மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள், கிளீனர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மாநகராட்சி ஒப்பந்த டிரைவர்கள் 600 பேரும், கிளீனர்கள் 250 பேரும் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்படி மாநகராட்சி வாகனங்களை வ.உ.சி. மைதானம் அருகே நிறுத்திவிட்டு டிரைவர்கள், கிளீனர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் சமூகநீதி ஓட்டுனர்கள் சங்கத்தினர் உள்பட பல அமைப்புகள் கலந்துகொண்டன. இந்த போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகி பன்னீர் கூறியதாவது:-
நிர்ணயிக்கப்பட்ட சம்பளம்
மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு தினக்கூலியாக ரூ.798 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்ததாரர்கள் மூலம் ரூ.445 தான் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம், தனியார் மயமாக்கல்லை கைவிட வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டம் வாபஸ்
இந்த வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில், ஆணையாளர் பிரதாப் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் தற்போது ரூ.13 ஆயிரம் சம்பளம் மட்டும் வாங்கப்படுவதாக தெரிவித்தனர். மாதம் ரூ.23,231 சம்பளம் பெறுவதற்கு வழிவகை செய்வதுடன், ஊதியத்துடன் கூடிய விடுப்பு மற்றும், மருத்துவ பரிசோதனைக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டது. இந்த உறுதிமொழியை ஏற்று டிரைவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கருப்பு பேட்ஜ் அணிந்தனர்
இந்த நிலையில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தினக்கூலி தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்தனர்.
இதுகுறித்து அண்ணல் அம்பேத்கர் தூய்மை பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த செல்வம் கூறும்போது, 3 நாட்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை செய்வோம். அதன்பின்னர் எங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 10-ந்தேதி அண்ணாசாலையில் இருந்து மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு கருப்புக்கொடி ஊர்வலம் நடத்தி வேலைநிறுத்த முன் அறிவிப்பு கொடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.