ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடிசை போடும் போராட்டம்
திட்டக்குடி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி குடிசை போடும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அருகே நாவலூர் கிராமத்தில் ஊராட்சிக்கு சொந்தமான பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழக விவசாய மக்கள் கட்சி சார்பில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏரியை ஆக்கிரமித்து வசித்து வரும் குடும்பங்களுக்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழக விவசாய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள், ஏரியை ஆக்கிரமித்து குடிசை போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இது பற்றி தகவல் அறிந்த திட்டக்குடி இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி தலைமையிலான போலீசார் மற்றும் மங்களூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை யெனில் நாங்களும் ஏரியில் குடிசை போட்டு வசிப்போம் என்றனர். அதனை கேட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வருகிற 17-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.
நடவடிக்கை
அதில் வரும் தீர்ப்பின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஏரியை யாரும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.