பருத்தி, எள் பயிர்கள் பாதிப்பு


பருத்தி, எள் பயிர்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 3 May 2023 12:45 AM IST (Updated: 3 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் பகுதியில் தொடர் மழையால் பருத்தி, எள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை

கொள்ளிடம் பகுதியில் தொடர் மழையால் பருத்தி, எள் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தொடர் மழை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம், பழையாறு, புதுப்பட்டினம், தாண்டவன்குளம், பழையபாளையம், எடமணல், வேட்டங்குடி, கடவாசல், திருக்கருகாவூர், குன்னம், மாதிரவேளூர், அகரஎலத்தூர், வடரங்கம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கோடை வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டமாக இருந்து வருகிறது.

சில இடங்களில் லேசான மழை பெய்தது. நேற்று தொடர்ந்து 4-வது நாளாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றும் வீசிய வண்ணம் இருந்தது.

பருத்தி, எள் பயிர்கள்

அதே நேரத்தில் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர கிராம பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே இந்த கனமழை பெய்கிறது. விட்டு விட்டு பெய்யும் இந்த கனமழையால் பருத்தி, எள் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் 3 மாத பயிராக வளர்ந்து நிற்கும் பருத்தி பயிர் தற்போது பெய்து வரும் மழையால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கொள்ளிடம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் சில கிராமங்களில் மட்டும் 50 ஏக்கர் பருத்தி மற்றும் 40 ஏக்கர் எள் பயிர் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

கோடை வெப்பம் தணிந்தது

கடந்த ஒரு மாத காலமாக வெயில் வாட்டி வந்த நிலையில் தற்போது மழை பெய்துள்ளதால் கொள்ளிடம் பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்பு அடைந்தது. கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு பரவலாக பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பருத்தி சாகுபடி, எள் சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக மழை பெய்துள்ள இடங்களில் மட்டுமே பயிர் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லேசான மழை பெய்த இடங்களில் பயிர் பாதிப்பு ஏற்படவில்லை. லேசான மழை பருத்தி மற்றும் எள் பயிருக்கு ஏற்றதாக அமைந்து விட்டது' என்றனர்.

மழையினால் ஒரு சில இடங்களில் செங்கல் தயாரிப்பு பணி பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story