ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

ராசிபுரத்தில் ரூ.58 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே பவர் ஹவுஸ் பின்புறம் உள்ள ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கிளை வளாகத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இந்த ஏலத்தில் முத்துக்காளிப்பட்டி, மசக்காளிபட்டி, கவுண்டம்பாளையம், சந்திரசேகரபுரம், அணைப்பாளையம், பாச்சல், மின்னக்கல், சிங்களாந்தபுரம், முருங்கபட்டி, குருசாமி பாளையம், அம்மாபாளையம் உள்பட தாலுகா முழுவதும் இருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த ஏலத்தில் சேலம், ஆத்தூர், ராசிபுரம், திருப்பூர், கோவை, பல்லடம் உள்ளிட்ட பல இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து ஏலத்தில் கலந்து கொண்டனர்.

நேற்று நடந்த ஏலத்தில் 2 ஆயிரத்து 103 பருத்தி மூட்டைகள் ரூ.58 லட்சத்துக்கு ஏலம் போனது. இந்த ஏலத்தில் ஆர்.சி.எச். ரக பருத்தி 2 ஆயிரத்து 48 மூட்டைகளும், டி.சி.எச். ரக பருத்தி 27 மூட்டைகளும், கொட்டு ரக பருத்தி 28 மூட்டைகளும், கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆர்.சி.எச். ரக பருத்தி ஒரு குவிண்டால் ஒன்றுக்கு (100 கிலோ) குறைந்தபட்சம் ரூ.6 ஆயிரத்து 889-க்கும், அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 199-க்கும், டி.சி.எச். ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 940-க்கும், அதிகபட்சமாக ரூ.8 ஆயிரத்து 199-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 399 முதல் அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரத்து 419-க்கும் ஏலம் விடப்பட்டது.


Next Story