திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்


திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்  பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 6 July 2023 11:53 AM GMT)

திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த பருத்தி ஏலத்தில் அதிகபட்சமாக குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 679-க்கு விலைபோனது.

திருவாரூர்

பருத்தி சாகுபடி

திருவாரூர் மாவட்டத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் கோடை காலத்தில் பருத்தி சாகுபடி மேற்கொள்வார்கள்.

கடந்த ஆண்டு பருத்தியில் அதிக அளவில் லாபம் கிடைத்ததால் இந்த ஆண்டு பெரும்பாலான விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி காய்த்து தற்போது அறுவடைக்கு தயாராகிவிட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பருத்தி பஞ்சு பறிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பருத்திக்கான ஏலமானது கடந்த 7-ந்தேதி தொடங்கப்பட்டு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்து வருகிறது.

அதன்படி நேற்றுமுன்தினம் நடந்த ஏலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஏலத்திற்கு பருத்தியை கொண்டுவந்தனர்.

ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்

பருத்தி குவிண்டால் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 679-க்கும், குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 709-க்கும் விலைபோனது.

இதுகுறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், நேற்றுமுன்தினம் நடந்த பருத்தி ஏலத்திற்கு செம்பனார்கோவில், ஆந்திரா, கும்பகோணம், பண்ருட்டி, திருப்பூர், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 22 வியாபாரிகள் வந்திருந்தனர்.

பருத்தி 5 ஆயிரத்து 19 குவிண்டால் ரூ.3 கோடியே 14 லட்சத்து 56 ஆயிரத்து 437-க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஏலத்தை காட்டிலும் இந்த ஏலத்திற்கு விவசாயிகள் ஓரளவு காய்ந்த பருத்தியை கொண்டு வந்திருந்தனர். இதனால் குறைந்த விலையில் இருந்த பருத்தி விலையானது நடுநிலைக்கு வந்துள்ளது. பருத்தியை நன்கு காயவைத்து கொள்முதலுக்கு கொண்டுவந்தால் சுமார் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே விவசாயிகள் பருத்தியை காய வைத்து கொண்டு வந்தால் அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படும் என்றார்.


Next Story