அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிகலெக்டர் அலுவலகத்தில் பெண் கவுன்சிலர் குழந்தையுடன் தரையில் உருண்டு தர்ணாசேலத்தில் பரபரப்பு
சேலம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அ.தி.மு.க. பெண் கவுன்சிலர் குழந்தையுடன் தரையில் உருண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண் கவுன்சிலர் தர்ணா
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. காடையாம்பட்டி பேரூராட்சி 6-வது வார்டு கவுன்சிலர் மேகலா தனது 2 மகள்கள் மற்றும் மகனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்ததும் மேகலா திடீரென தனது மகனுடன் தரையில் உருண்டு போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர் 'எனது வார்டில் அடிப்படை பிரச்சினையை தீர்க்கும் வரை தனது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டேன்' என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை அங்கிருந்த பெண் போலீசார் எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் எழுந்திருக்க மறுத்து விட்டார். பின்னர் போலீசார் அவரை வலுக்கட்டாயமாக தூக்கினர்.
பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டேன்
இதையடுத்து மேகலாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாவது:-
ஒவ்வொரு மன்ற கூட்டத்திலும் எனது வார்டில் சாலை, குடிநீர், சுகாதார வளாகம் கட்டுதல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறேன். ஆனால் கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கூறினாலும் கண்டுகொள்ளவில்லை. எனவே வார்டில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கும் வரை எனது குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து கோரிக்கைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து விட்டு அங்கிருந்து அவர் தனது குழந்தைகளுடன் புறப்பட்டு சென்றார்.