குப்பைகள் அருகில் அமர்ந்து கவுன்சிலர், பொதுமக்கள் போராட்டம்
திருப்பத்தூர் நகராட்சியை கண்டித்து குப்பைகள் அருகில் அமர்ந்து கவுன்சிலர், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு ஹாஜ் மியான் தெரு, குலாம் ரசூல் தெரு, வரதராஜ பெருமாள் கோவில் தெரு, உள்ளிட்ட தெருகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து வாங்கப்படாததால் பொதுமக்கள் தெருக்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். கொட்டப்படும் குப்பைகளை நகராட்சி நிர்வாகம் சரியாக அகற்றாததால் செல்லாதால் குப்பைகள் தெருக்களில் தேங்கியுள்ளது.
இதனால் நோய் தொற்று அபாயம் உருவாகி வருவதாகவும், குப்பைகளை அகற்றக்கோரியும் நகராட்சி ஆணையரிடம் பல முறை நகராட்சி கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள் புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 10-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் முஜிபுர்ரகுமான் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் குப்பைகள் உள்ள சாலையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகம், நகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமாதானம் ஆகதால் நகராட்சி துப்புரவு அலுவலர் வந்து குப்பைகளை அகற்றியதின் காரணமாக கவுன்சிலர் மற்றும் அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.