கடலூர்பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு


கடலூர்பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
x
தினத்தந்தி 1 Jun 2023 12:15 AM IST (Updated: 1 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

கடலூர்


கடலூர் தேவனாம்பட்டினத்தில் பெரியார் அரசு கலைக்கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முது கலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். இதற்கிடையே 2023-24-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு பிளஸ்-2 முடித்த மாணவர்கள், கடந்த 8-ந் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர். இதையடுத்து சிறப்பு பிரிவில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேசுவரன் தலைமை தாங்கினார். பின்னர் பேராசிரியர்கள் சாந்தி ராமகிருஷ்ணன், ராஜ்குமார், மைக்கேல், பிரகாஷ், சர்மிளா ஆகியோர் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிக்கோபாரை சேர்ந்த தமிழர்கள் போன்றோரிடம் மதிப்பெண் சான்றிதழ், பள்ளி மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை சரி பார்த்து கலந்தாய்வு நடத்தினர்.

இதில் 3 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை அளிக்கப்படும். இதில் பேராசிரியர்கள் சேதுராமன், அருள்தாஸ், கண்ணன், குமணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், தொழில்முறை வேதியியல், தாவரவியல், விலங்கியல், நுண்ணுயிரியல், உளவியல், காட்சி தகவலியல், கணினி பயன்பாட்டியல் போன்ற பாடங்களுக்கு மட்டும் கலந்தாய்வு நடைபெறுகிறது. பின்னர் 5-ந் தேதி வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடங்களுக்கும், 6-ந் தேதி வரலாறு, பொருளியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாக பாடங்களுக்கும், 7-ந் தேதி தமிழ் பாடத்திற்கும், 8-ந் தேதி ஆங்கில பாடத்திற்கும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடக்கிறது. இந்த கலந்தாய்வு தினசரி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.


Next Story