7வது நாளாக தொடரும் ஆலோசனை; அ.தி.மு.கவில் ஒற்றை தலைமைக்கு பெருகும் ஆதரவு...!


7வது நாளாக தொடரும் ஆலோசனை; அ.தி.மு.கவில் ஒற்றை தலைமைக்கு பெருகும் ஆதரவு...!
x
தினத்தந்தி 20 Jun 2022 10:34 AM GMT (Updated: 20 Jun 2022 10:36 AM GMT)

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு அதிகரித்து வருகிறது.

சென்னை

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பி இருக்கிறது. ராணுவ கட்டுப்பாடு கொண்ட இயக்கம் என்று வர்ணிக்கப்பட்ட அ.தி.மு.க.வில், இப்போது கோஷ்டி பூசல் வலுத்து வருகிறது.

ஒற்றை தலைமை விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் அசராமல் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனால் கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி நிர்வாகிகள் நடையாய் நடந்து சமரச பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறார்கள்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனது ஆதரவாளர்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகிறார்கள். ஒற்றை தலைமைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவபதி, மாணவர் அணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

மேலும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டாக்டர் வி.சுனில் தனது ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். அதேவேளை ஓ.பன்னீர்செல்வம் இல்லத்திலும் நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ்ந்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, செல்லூர் ராஜூ, சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், ஆர்.பி.உதயகுமார், மு.தம்பிதுரை எம்.பி. ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள்.

அதனைத்தொடர்ந்து செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, தம்பிதுரை எம்.பி. ஆகியோர் நேராக ஓ.பன்னீர்செல்வம் இல்லம் நோக்கி சென்றனர். அங்கு ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகர், எம்.எம்.பாபு ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையிலும் எந்தவித சமரசமும் ஏற்படவில்லை. இதனால் சமாதானம் செய்ய வந்த நிர்வாகிகள் ஏமாற்றத்துடனேயே திரும்பி சென்றனர். இதனால் வழக்கம்போல நிர்வாகிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தை முயற்சி தோல்வியில் முடிந்தது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை பிரச்சினையை எழுப்ப எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் வியூகம் வகுத்து வருகிறார்கள். இதை முறியடிக்க ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்திவருகிறார்.

7வது நாளாக ஆலோசனை இந்நிலையில் 7வது நாளாக இன்றும் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இன்றைய தினம் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதில் பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அது போல் பொதுக் குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு கோரி எடப்பாடி தரப்பு காவல் நிலையத்தை நாடியுள்ளது.இதனால் அதிமுக பொதுக் குழு நடக்குமா நடக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்து கோகுல இந்திரா ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது;-

கட்சியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவரை பின்தொடர முடிவு செய்துள்ளோம். எந்த இடத்திலும் எதிர் அலை இல்லாத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்தியுள்ளார். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருகிரோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக அணிவகுக்கும். எடப்பாடி பழனிசாமிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

கட்சியின் நலன் கருதி ஓ.பன்னீர்செல்வம் நல்ல முடிவை எடுப்பார். அறிவித்தபடி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும்; அதில் எந்த மாற்றமும் இல்லை. எத்தனை வழக்குகள் வந்தாலும் அதனை சட்டரீதியாக சந்தித்து வெற்றி பெறுவோம் .

ஒற்றை தலைமை விவகாரத்தில் அ.தி.மு.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் யாருக்கு அதிக ஆதரவு இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே கடந்த ஒருவாரமாக மிகப் பெரிய பலப்பரீட்சை நடந்து வருகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி எட்டி பிடிக்க முடியாத வேகத்தில் முன்னேறி உள்ளார்.

அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளிலும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிக ஆதரவு இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட எடப்பாடி பழனிசாமியை தான் ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியில் சொல்லாமல் இருந்தனர். ஆனால் நேற்று முதல் அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. பலமாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. அவர் தனது வீட்டில் இருந்தபடி மூத்த தலைவர்கள் மூலம் காய்களை நகர்த்தி வருகிறார்.


Next Story