ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது


ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது
x

மலேசியாவில் வேலை வாங்கி தருவதாகக்கூறி ரூ.6 லட்சம் மோசடி செய்த தம்பதி கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சின்ன அய்யன்குளத்தை சேர்ந்தவர் ரீட்டா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாழைக்காய்பட்டியை சேர்ந்த முருகானந்தம் (வயது 45), அவருடைய மனைவி கவிதா (40) ஆகியோர் ரீட்டாவுக்கு அறிமுகம் ஆகியுள்ளனர். அப்போது அவர்கள் தங்களுக்கு மலேசியா, சிங்கப்பூர், கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருப்பவர்களுடன் பழக்கம் உள்ளது. அவர்கள் மூலம் அந்த நாடுகளில் தங்களால் வேலை வாங்கி தர முடியும் என்று கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய ரீட்டாவும் தனக்கு மலேசியாவில் வேலை வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதையடுத்து விசா, பயண செலவு மற்றும் பிற செலவுக்காக ரூ.6 லட்சம் வரை செலவாகும் என்று தம்பதியினர் ரீட்டாவிடம் தெரிவித்தனர். அவரும் அந்த தொகையை கொடுத்துள்ளார். பின்னர் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மலேசியாவில் வேலை வாங்கி தருவதாக அந்த தம்பதியினர் கூறினர்.

ஆனால் அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து தனது பணத்தை திரும்ப பெறுவதற்காக முருகானந்தம் வீட்டுக்கு ரீட்டா சென்றார். ஆனால் அவருடைய வீடு பூட்டி கிடந்தது. பின்னர் அக்கம்பக்கத்தில் விசாரித்த போது தான் ரீட்டாவுக்கு தான் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனிடம் இதுகுறித்து ரீட்டா புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் முருகானந்தம் புதுக்கோட்டையிலும், கவிதா திண்டுக்கல் பகுதியிலும் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story