தம்பதியிடம் 42 பவுன் தங்கம், ரூ.2½ லட்சம் மோசடி


தம்பதியிடம் 42 பவுன் தங்கம், ரூ.2½ லட்சம் மோசடி
x

தம்பதியிடம் 42 பவுன் தங்கம், ரூ.2½ லட்சம் மோசடி செய்த உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் ஜெரினாபேகம் (வயது 40). இவர் தனது மகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்துவந்தார். அப்போது திருமணத்திற்கு நகை வாங்க வேண்டும் என்பதற்காக திருச்சி நடுதெருவை சேர்ந்த தனது உறவினர் ரபியாஸ்பசிரியா (37) என்பவரிடம் கடந்த ஆண்டு 42 பவுன் தங்க நாணயங்களை கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து ரபியாஸ்பசிரியா ஜெரினாபேகத்தை அழைத்துக்கொண்டு திருச்சியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு நகை வாங்க சென்றுள்ளனர். அப்போது ரபியாஸ்பசிரியா ஜெரினாபேகத்திடம் தேவையான நகைகளை தேர்வு செய்யும்படி கூறிவிட்டு, 42 பவுன் தங்க நாணயங்களை தனது பெயருக்கு ரசீது போட்டுள்ளார். மேலும், திருமணத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க ரூ.2½ லட்சத்தையும் அவரிடம் ஜெரினா பேகம் கொடுத்துள்ளார். ஆனால் நகைகளையும், மளிகை பொருட்களையும் அவர் வாங்கி கொடுக்கவில்லை. இதுபற்றி ஜெரினாபேகம் தனது கணவருடன் சென்று கேட்ட போது, ரபியாஸ்பசிரியா மற்றும் அவருடைய உறவினர்கள் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி நகையையும், பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் ரபியாஸ்பசிரியா, அவருடைய கணவர் முகமது ரபிக் (46) மற்றும் உறவினர்கள் சாகர்பானு (62), காலித் (22), சிரின் (19) ஆகிய 5 பேர் மீது காந்திமார்க்கெட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story