அக்னி தீர்த்த கடலில் குதித்து தம்பதி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது


அக்னி தீர்த்த கடலில் குதித்து தம்பதி தற்கொலை; உருக்கமான கடிதம் சிக்கியது
x

இடுப்பில் துணியை சேர்த்து கட்டிக்கொண்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தம்பதி தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் வீட்டில் உருக்கமான கடிதம் சிக்கியது.

ராமேசுவரம்,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி தனலட்சுமி (59). இவர் சர்வோதயா சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்களின் ஒரே மகன் கனீஸ் பிரபாகரன் (22). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் தனது பெற்றோர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். கடந்த ஆண்டு தந்தை கோவிந்தராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனவேதனையடைந்த பிரபாகரன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மகன் இறந்த சோகம்

ஒரே மகனை இழந்ததால் கோவிந்தராஜ், தனலட்சுமி ஆகியோர் மிகுந்த மனவேதனையடைந்து எப்போதும் மகனை நினைத்துக்கொண்டே இருந்து வந்தனர். அவர்களை உறவினர்கள் தேற்றி ஆறுதல் கூறி வந்தனர்.

இந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த 3-ந்தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அவர்களை உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். 2 நாட்கள் ஆகியும் அவர்களை பற்றிய விவரங்கள் கிடைக்காததால் நேற்று முன்தினம் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் உறவினர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கடலில் மிதந்த உடல்கள்

இதற்கிடையே ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் ஒன்றாக மிதந்தன. இருவரும் ஒரே துணியால் தங்களது இடுப்பில் கட்டிய நிலையில் கடலில் பிணமாக மிதந்தனர். இதைப்பார்த்து அங்கு நீராடிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை அறிந்த ராமேசுவரம் கடலோர போலீசார் விரைந்து வந்து, கடலில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்க முயன்றபோது, இருவரது உடல்களும் துணியால் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள், 2 உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். விசாரணையில், ராமேசுவரம் கடலில் பிணமாக மிதந்தது பொள்ளாச்சி பகுதியில் காணாமல்போன கோவிந்தராஜ், தனலட்சுமி என்பதும், மகனை இழந்த துக்கம் தாளாமல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

உருக்கமான கடிதம் சிக்கியது

இதற்கிடையே தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு கோவிந்த ராஜ் எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் இருந்தது தெரியவந்தது. அதை கோட்டூர் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், எங்களது ஒரே மகன் இறந்ததால் வாழ பிடிக்கவில்லை. எங்களின் சொத்துகளை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கொடுக்கவில்லை.

எனவே நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக மகன் கனீஸ் பிரபாகரன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.


Next Story