விவசாயியை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு


விவசாயியை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை - சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x

சேலம் அருகே விவசாயியை கொன்ற தம்பதிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே உள்ள கருப்பனார் கோவில் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). அதே பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (63). இவருடைய மனைவி சரோஜா (60). இவர்களுக்குள் விவசாய நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது.

மேலும் நிலம் சம்பந்தமாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. கோர்ட்டு உத்தரவுப்படி மாரப்பன் விவசாயம் செய்த 4½ ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக்கொண்டது. இதனால் கந்தசாமி மீது தம்பதியினருக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஆயுள் தண்டனை

இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந்தேதி கந்தசாமி அவரது தோட்டத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மாரப்பன், அவரது மனைவி சரோஜா ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த அரிவாளால் கந்தசாமியை வெட்டி கொலை செய்தனர். இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை சேலம் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விவசாயியை கொன்ற மாரப்பன், அவருடைய மனைவி சரோஜா ஆகிய 2 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு அளித்தார்.


Next Story