ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை ஆஸ்பத்திரிலேயே விட்டுச்சென்ற தம்பதி; காப்பகத்தில் ஒப்படைப்பு


ஒரே பிரசவத்தில் பிறந்த 3 பெண் குழந்தைகளை ஆஸ்பத்திரிலேயே விட்டுச்சென்ற தம்பதி; காப்பகத்தில் ஒப்படைப்பு
x

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 3 பெண் குழந்தைகளை தங்களால் வளர்க்க முடியாது என்று கூறிவிட்டு பெற்றோர் விட்டு சென்றனர். இதனால் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

3 பெண் குழந்தைகள்

சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் பிறந்தன. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அந்த குழந்தைகளின் பெற்றோர், தங்களால் குழந்தைகளை வளர்க்க முடியாது என்று டாக்டர்களிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த குழந்தைகளின் எடை குறைவாக இருந்ததால், டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதனிடையே தங்களால் குழந்தைகளை பராமரித்து வளர்க்க முடியாது என்பதால், அதனை நீங்களே வளர்த்துக்கொள்ளுங்கள் என்று கூறி விட்டு, அந்த குழந்தைகளை பெற்றோர் ஆஸ்பத்திரியில் விட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த குழந்தைகள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ அதிகாரிகள் கண்காணிப்பில் இருந்தன.

காப்பகத்தில் ஒப்படைப்பு

இந்த நிலையில் அந்த குழந்தைகளை அரசு சார்பில் பராமரிக்கும் வகையில் நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் நடவடிக்கை எடுத்தார். இதன்படி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்த கலெக்டர் கார்மேகம், குழந்தைகளை பார்வையிட்டார். பின்னர் அரசு காப்பகத்தில் பராமரிக்கும் வகையில், குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமாமகேஸ்வரியிடம் ஒப்படைத்தார்.

இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சேலம் காப்பாகத்தில் 3 பெண் குழந்தைகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சில நாட்களில் அந்த குழந்தைகளின் பெற்றோர் மனம்திருந்தி வந்தால், அவர்களிடம் குழந்தைகள் ஒப்படைக்கப்படும். அவர்கள் வரவில்லை என்றால் அரசு விதிமுறைகளின்படி 3 குழந்தைகளும் தத்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


Next Story