சாத்தான்குளம் வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சாட்சியத்தால் திருப்பம்


சாத்தான்குளம் வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் சாட்சியத்தால் திருப்பம்
x

சாத்தான்குளம் வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் நேற்று அளித்த சாட்சியத்தால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது, அதில் தொடர்புடைய போலீசார் எங்கிருந்தார்கள் என்பது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

மதுரை


சாத்தான்குளம் வழக்கில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் நேற்று அளித்த சாட்சியத்தால் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தின்போது, அதில் தொடர்புடைய போலீசார் எங்கிருந்தார்கள் என்பது தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர்.

சாத்தான்குளம் வழக்கு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார், கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. கொலை வழக்குப்பதிவு செய்தது. இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதானார்கள்.

இந்த இரட்டைக்கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. சாட்சிகள் ஆஜராகி தங்களின் சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி நாகலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 26-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

எங்கிருந்தார்கள்?

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து வந்து அடைக்கப்பட்டு இருந்தபோது, இந்த வழக்கில் கைதான அனைவரும் சாத்தான்குளம் போலீஸ்நிலையத்தில்தான் இருந்தனர். இதற்கு, அவர்கள் அனைவரின் செல்போன் சிக்னல்கள் தொடர்பான ஆவணங்கள் உள்ளன, என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தரப்பில் சாட்சியம் அளித்ததாகவும், இதுதொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story