மேலவளவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேர் மீது வேறு வழக்குகள் உள்ளனவா?
மேலவளவு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 13 பேர் மீது வேறு வழக்குகள் உள்ளனவா? போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
மதுரை மாவட்டம், மேலவளவு பஞ்சாயத்து தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராமர், செல்வம், மனோகரன், மணிகண்டன், அழகு, சொக்கநாதன், சேகர், பொன்னையா, ராஜேந்திரன், ரெங்கநாதன், சக்கரைமூர்த்தி, ஆண்டிச்சாமி உள்ளிட்ட 13 பேர் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர். பிறந்த நாளை முன்னிட்டு பொது மன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விடுதலையை எதிர்த்து வக்கீல் ரத்தினம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை ஐகோர்ட்டு விசாரணை செய்து, விடுதலையான 13 பேரும் மதுரை மாவட்டத்தை விட்டு வெளியேறி, வேலூர் மாவட்டத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டின் சிறப்பு அமர்வு விசாரணை செய்து வருகிறது. இந்த அமர்வு, 13 பேரும் வேலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டது. இந்த நிலையில் 13 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, கொலையானவர்களின் உறவினர்கள் மதுரை ஐகோர்ட்டில் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், இந்த வழக்கில் முன்கூட்டி விடுதலை செய்யப்பட்டதில் பலருக்கு வேறு சில வழக்குகளிலும் தொடர்பு உள்ளது. எனவே முன்கூட்டி விடுதலை செய்ததை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், விடுதலை ஆனவர்களுக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.