8 பேருக்கு ஆயுள் தண்டனை


8 பேருக்கு ஆயுள் தண்டனை
x

ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம்


ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கொலை வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மேலும் 6 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து ராமநாதபுரம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

கழுத்தை அறுத்து கொலை

ராமநாதபுரம் ஓம்சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். இவர் வழுதூர் மின் நிலையத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி, கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்.

இவருக்கும் ராமநாதபுரம் அருகே உள்ள தில்லைநாயகபுரம் பகுதியை சேர்ந்த கோபால் (81) என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில் தமிழரசன் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி தனது ஊரான மாடக்கொட்டானுக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் சேதுபதிநகர் வடக்கு 4-வது தெருவில் வந்தபோது, அவரை கீேழ தள்ளி அரிவாளால் வெட்டியும், கழுத்தை அறுத்தும் ஒரு கும்பல் கொலை செய்தது..

காரணம் என்ன?

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த 2013-ம் ஆண்டு தில்லைநாயகபுரத்தை சேர்ந்த மேற்கண்ட கோபாலின் அண்ணன் சுந்தர்ராஜன் கொலை செய்யப்பட்டார். அதற்கு தமிழரசன்தான் காரணம் என்று கருதிய கோபால், தனது மகன்களை வைத்து சதித்திட்டம் தீட்டி தமிழரசனை பழிதீர்த்தது தெரியவந்தது.

கைது

இதனை தொடர்ந்து கோபால் (81), அவரின் மகன்கள் மாதவன்மகேஷ் (34), பாலயோகேஷ் (32), அபிராமம் வடக்குத்தெரு செல்வம் (34), அச்சுந்தன்வயல் சுப்பிரமணியன் என்ற சீனிவாசன் (46), தில்லைநாயகபுரம் முத்துராஜா, விஜயகுமார் (42), கோபி (40) ஆகிய 8 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

8 பேருக்கு ஆயுள் தண்டனை

வழக்கினை விசாரித்த நீதிபதி விஜயா, மேற்கண்ட மாதவன் மகேஷ் மற்றும் செல்வம் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், கோபால் உள்பட மற்ற 6 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு சார்பில் சிவசங்கரன் ஆஜரானார்.


Next Story