ரூ.12 செலுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்:விபத்தில் இறந்ததால் குடும்பத்துக்குரூ.2 லட்சம் வழங்க வேண்டும்


ரூ.12 செலுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர்:விபத்தில் இறந்ததால் குடும்பத்துக்குரூ.2 லட்சம் வழங்க வேண்டும்
x

ரூ.12 செலுத்தி காப்பீடு திட்டத்தில் சேர்ந்தவர் விபத்தில் இறந்ததால், அவரது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வங்கி வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

நாமக்கல்

லாரி உரிமையாளர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பள்ளிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் அப்புசாமி (வயது50). இவர் சொந்தமாக லாரி வாங்கி, அவரே ஓட்டி தொழில் செய்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நாமக்கல்லில் இருந்து பஞ்சாப்புக்கு சென்ற போது விபத்தில் இறந்தார்.

இறந்த அப்புசாமி பிரதம மந்திரியின் விபத்து காப்பீட்டு திட்டத்தில் நாமக்கல் அருகே உள்ள வேல கவுண்டம்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பிரீமியம் செலுத்தியிருந்தார். இதேபோல தனியார் காப்பீடு நிறுவனம் ஒன்றில் ரூ.2 லட்சம் காப்பீடு செய்து இருந்தார்.

நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு

அப்புசாமி விபத்தில் இறந்த பின்னர் அவரது மனைவி கவுரி காப்பீட்டு தொகைகளை தனக்கும், மகன் ரஞ்சித், மகள் மோகனப்பிரியா மற்றும் தாயார் தாயம்மாள் ஆகியோருக்கும் வழங்குமாறு விண்ணப்பம் செய்திருந்தார். ஆனால், காப்பீட்டுத் தொகையை வழங்க வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் காலதாமதம் செய்து வந்ததால் பணத்தை வழங்க கேட்டு, கடந்த 2018-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

வழக்கில் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினர்.

ரூ.50 ஆயிரம் இழப்பீடு

அந்த தீர்ப்பில், பிரதம மந்திரியின் விபத்து காப்பீடு திட்டம் ஒவ்வொரு குடிமகனும் விபத்து காப்பீடு பெற்று இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்டது. வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோர்களிடம் சிறிய தொகை பெற்றுக் கொண்டு இத்திட்டத்தின் மூலம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன அப்புசாமி ரூ.12 செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்துள்ளார். அவர் இறந்துவிட்ட நிலையில் காப்பீடு தொகை ரூ.2 லட்சத்தை அற்ப காரணங்களை கூறி பணம் வழங்க மறுப்பதுதவறானது.

4 வார காலத்துக்குள் இறந்து போன அப்புசாமியின் மனைவி, மகன், மகள் மற்றும் தாயாருக்கு வங்கி மற்றும் காப்பீட்டு நிறுவனம் ஆகியவை காப்பீட்டு தொகை தலா ரூ.2 லட்சத்தை அப்புசாமி இறந்த நாள் முதல் பணம் வழங்கப்படும் நாள் வரை 6 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும். மேலும் வங்கியும், இன்சூரன்ஸ் நிறுவனமும் சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story