நீதிமன்ற பணியாளருக்கு இழப்பீட்டு தொகை வழங்க கோர்ட்டு உத்தரவு
நீதிமன்ற பணியாளருக்கு இழப்பீட்டு தொகை வழங்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
செந்துறையில் இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இளநிலை கட்டளை பணியாளராக பணிபுரிந்து வருபவர் பழனிவேல். இவரது மனைவிக்கு கடந்த 12.7.2019 அன்று திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டது. பின்னர் பழனிவேலின் மனைவிக்கு டாக்டரின் அறிவுரைக்கிணங்க கதிர் இயக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தமிழக அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு பணியாளரான பழனிவேல் தனது மனைவிக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு செலவான தொகை ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 361-ஐ மருத்துவ காப்பீட்டு தொகையாக திரும்ப அளிக்கக்கோரி உரிய மருத்துவ அறிக்கைகள் மற்றும் ரசீதுகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டருக்கு விண்ணப்பித்தார். கலெக்டர் அதிகாரமளிப்பு குழுவானது மருத்துவ காப்பீட்டு தொகையை திரும்ப அளிக்க சம்பந்தப்பட்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடேட் என்ற காப்பீட்டு நிறுவனத்திற்கு பரிந்துரை செய்தது.
இது தொடர்பாக பழனிவேல், சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திற்கு பலமுறை கடிதம் அனுப்பியும், நேரில் சென்றும் மருத்துவ காப்பீட்டு தொகை கிடைக்காததால், அவர் அரியலூர் மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி ஆனந்தன் விசாரித்து, பழனிவேலுக்கு சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் 30 நாட்களுக்குள் உரிய இழப்பீட்டு தொகையான ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 361-ஐ உடனடி பணப்பலனாக வழங்க உத்தரவிட்டார். அவ்வாறு வழங்க தவறும்பட்சத்தில் உரிய சிவில் நீதிமன்றம் மூலம் 6 சதவீத வட்டியுடன் காப்பீட்டு தொகை வசூலிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.