கோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு


கோவில்களில் ஸ்ட்ராங் ரூம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் - சென்னை ஐகோர்ட்டு
x

கோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்' அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோவில்களில் உள்ள சாமி சிலைகளை பாதுகாப்பது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், "சிலைகளை பாதுகாக்க கோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்கள்' கட்ட வேண்டும், அறங்காவலர்கள் நியமிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பது உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், கோவில்கள் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு உத்தரவின்படி எத்தனை கோவில்களில் 'ஸ்ட்ராங் ரூம்கள்' கட்டப்பட்டுள்ளன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "ஒரே ஒரு கோவிலில் ஒரு ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டுள்ளது" என்ற கூறிய அரசு வக்கீல், இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக கூறினார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள். "கோவில்களில் ஸ்ட்ராங் ரூம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு ரூ.308 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு அறை மட்டும் கட்டப்பட்டுள்ளது. கோவில்களில் உள்ள ஒவ்வொரு சிலையும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ளது.

ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாததற்காக தாமாக முன்வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும். அறநிலையத் துறை செயலாளரை ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும்" என்று நீதிபதிகள் எச்சரிக்கை செய்தனர். பின்னர், இதுகுறித்து 2 வாரத்துக்குள் அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

1 More update

Next Story