மத்திய அரசின் கடலோர மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பை தமிழில் வெளியிட கோரி வழக்கு- தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
மத்திய அரசின் கடலோர மண்டல ஒழுங்குமுறை அறிவிப்பை தமிழில் வெளியிட தமிழக அரசு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நெல்லையை சேர்ந்த ரோசாரியோ விஜோ என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், கடலோரம் மற்றும் கடற்கரை பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில் கடலோர மீனவ மக்களிடம் கருத்து கேட்டு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைவு தயாரிக்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் மீனவ மக்களுக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பு குறித்து எந்த வித விழிப்புணர்வும் இல்லை. ஒருதரப்பினர் அதனை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த திட்டத்தில் உள்ள விதிமுறைகள், சாதக பாதகங்கள் அவர்களுக்கு தெரியாது. இத்தகைய சூழ்நிலையில், கடலோர மண்டல மேலாண்மை திட்டம் தயாரிப்பது ஏற்புடையதாக இருக்காது. மராட்டியம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளில் இந்த அறிவிப்பு மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, மத்திய அரசின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தமிழிலும் மொழிபெயர்த்து வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரத சக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர், தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஆகியோர் பதிலளிக்கும் படி உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.