சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
நீண்டநாள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஐகோர்ட்டு பரிசீலிக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சென்னை,
நீண்ட காலம் சிறையில் உள்ள சிறைவாசிகளை நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி அவர்களது குடும்பத்தினர் தொடர்ந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன.
இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, முதல்-அமைச்சரின் பரிந்துரையின்பேரில் 49 கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான பரித்துரை கவர்னர் முன் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நீண்ட நாள் சிறைவாசிகள் ஷம்மா உள்ளிட்ட இருவரின் விடுப்பை நீடிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன்பு விசாரணை வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அவர்களது விடுப்பை நீட்டித்து உத்தரவிட்டனர்.
தொடர்ந்து சிறைவாசிகள் விடுதலை குறித்த பரிந்துரை கவர்னர் முன் நிலுவையில் உள்ள நிலையில், அவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து ஐகோர்ட்டு பரிசீலிக்க முடியுமா என்று கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக்கிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த அவர், அரசிடம் எந்த கோப்புகளும் நிலுவையில் இல்லை என்றும், கவர்னரிடம் மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். கவர்னருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பாக ஏற்கனவே உள்ள தீர்ப்பின் விவரங்கள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு வழக்கின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.