ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.11 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
மாட்டுத்தாவணி
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.
அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் கலந்து கொண்டு பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
ரூ.11 லட்சத்துக்கு விற்பனை
இந்த சந்தையில் நேற்று விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் உள்ள 47 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 30 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை நடந்தது. சந்தையில் அதிகபட்சமாக செவலை காளை கன்றுடன் காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.66 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.43 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.11 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.