சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை:மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன


சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை:மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
x
தினத்தந்தி 13 Jun 2023 1:32 AM IST (Updated: 13 Jun 2023 5:49 PM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் பெய்த பரவலாக மழையில் மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன

சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே இடி, மின்னலுடன் பெய்த கனமழையின் போது விவசாய நிலத்தில் கட்டி இருந்த 2 மாடுகள் மின்னல் தாக்கி உயிர் இழந்தன.

சேலத்தில் திடீர் மழை

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. அதாவது நேற்று வெயிலின் அளவு 101 டிகிரியாக பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் இரவு 8.20 மணி அளவில் மாநகரில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இந்த திடீர் மழையினால் இருசக்கர வாகன ஓட்டிகள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழை சிறிது நேரமே நீடித்தது. பின்னர் விட்டுவிட்டு மழை தூறிக்கொண்டே இருந்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதேபோல் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

மின்னல் தாக்கி மாடுகள் சாவு

எடப்பாடி ஒன்றியம் பக்க நாடு கிராமம் எட்டிமரத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (50), விவசாயி. இவருடைய மனைவி பாவாயி. இந்த தம்பதியினர் அப்பகுதியில் உள்ள விவசாயதோட்டத்தில் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் திடீரென பலத்த இடி,மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது பழனிசாமியின் விவசாய தோட்டத்தில் கட்டி இருந்த 2 பசு மாடுகளை மின்னல் தாக்கியது. இதில் சுருண்டு விழுந்த பசுமாடுகள் அதே இடத்தில் துடிதுடித்து செத்தன. இதுகுறித்து வருவாய்த்துறையினர் மற்றும் கால்நடை துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்கநாடு, ஆடையூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இருப்பினும் இந்த பகுதிகளுக்கு அருேக உள்ள எடப்பாடி நகரில் மழை பெய்யாததால் மழையை எதிர்பார்த்து இருந்த எடப்பாடி சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் ஏமாற்றத்திற்கு உள்ளானார்கள்.


Next Story